யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலக் கல்வியும், பாடசாலைகளும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை
Description
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. வலிகாமப் பிரிவில் தெல்லிப்பழை, மல்லாகம், மயிலிட்டி, அச்சுவேலி, உடுவில், வட்டுக்கோட்டை, நல்லூர், பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய், வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, கோப்பாய், புத்தூர் ஆகிய 14 இடங்களிலும், தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய 5 இடங்களிலும், வடமராட்சியில் பருத்தித்துறை, உடுப்பிட்டி, கட்டைவேலி ஆகிய 3 இடங்களிலும், பச்சிலைப்பள்ளிப் பிரிவில் புலோப்பளை, முகமாலை, முள்ளிப்பற்று, தம்பகாமம் ஆகிய நான்கு இடங்களிலும் இப்பாடசாலைகள் அமைந்திருந்தன. இவற்றைவிட தீவுப் பகுதியில், அல்லைப்பிட்டி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய இடங்களிலும் பாடசாலைகள் இருந்தன. ஒவ்வொரு கட்டளையகத்திலும் இப்பாடசாலைகளை மேற்பார்வை செய்ய “ஸ்கூலாசென்” (scholarchen) என்னும் ஒரு குழு இருந்தது. இக்குழுவில் அரசாங்க அதிகாரிகளும், மதகுருவும் இடம்பெற்றிருந்தனர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் தொடக்கத்தில் பாடசாலை நிர்வாகத்தில் மதகுருவுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருந்தது.